மது அருந்துவதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் சினிமா புரொடக்‌ஷன் உதவியாளருக்கு கத்திக்குத்து: ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது

சென்னை: சாலிகிராமம் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி(64). இவர் சினிமா துறையில் புரொடக்‌ஷன் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது வீட்டின் அருகே உள்ள பொன்னியம்மன் கோயில் நிர்வாக குழு தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள பொன்னியம்மன் கோயிலில் வேலை செய்து வரும் மூதாட்டியிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென ரவி மீது தாக்குதல் நடத்தியது. அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி, இரண்டு கை மணிக்கட்டையும் கிழித்துவிட்டு தப்பியது.

இதில் படுகாயமடைந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் விருகம்பாக்கம்  போலீசார் விசாரித்தனர். அதில், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அம்மன் நகரை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (21), அருண்குமார் (20), திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து (21) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் புகார் அளித்த 6 மணி நேரத்தில் சிசிடிவி பதிவு உதவியுடன் திருவொற்றியூர் பகுதியில் பதுங்கி இருந்து 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 3 பேரும் ரவி வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகில் பைக்கை நிறுத்தி மது அருந்தியுள்ளனர். அதை ரவி தட்டிக்கேட்டு கடுமையாக திட்டியுள்ளார். அதற்கு பழி தீர்க்க 3 பேரும் முடிவு செய்து நேற்று முன்தினம் ரவியை வழிமறித்து கத்தியால் குத்தியது தெரியவந்தது.

Related Stories: