திருப்பத்தூர் அடுத்த கந்திலியில் 12 இருளர் குடும்பங்களுக்கு 100 நாள் வேலைக்கான ஆணை-பிடிஓக்கள் வழங்கினர்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே சின்னூர்பங்களா பகுதியில் இருளர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகி வந்தனர்.இதுகுறித்து கடந்த மாதம் தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, சின்னூர்பங்களா பகுதியில் வசிக்கும் இருளர் இனமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இருளர் இனமக்கள் வசிக்கும் பகுதியில் ஆய்வு செய்து, அதன் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், இருளர் இனமக்களுக்கு அரசு சார்பில் வேறு இடத்தில் மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளுடன், பசுமை வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இருளர் இனமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக்கணக்கு ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுத்து, 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது.

இதில், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரகலா மற்றும் கலீல்(கிராம ஊராட்சி), ஊராட்சி மன்ற தலைவர் பிரபு ஆகியோர், 12 இருளர் இனகுடும்பங்களுக்கு 100 நாள் வேலைக்கான பணி ஆணையை வழங்கினர். தொடர்ந்து, அவர்கள் 100 நாள் வேலையில் ஈடுபட்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள இருளர் இனமக்கள், தங்களது நிலை குறித்து செய்தி வெளியிட்டு அரசின் அனைத்து திட்டங்களும் கிடைக்க காரணமாக இருந்த தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: