11 ஆண்டுகளுக்கு பிறகு அந்தியூர் பெரிய ஏரி நிரம்பியது

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள பெரிய ஏரி நேற்றிரவு அதன் முழு கொள்ளளவான 41.8 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் நிரம்பியது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை விநாடிக்கு 200 கனஅடி உபரிநீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த உபரிநீர், அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையம் ஏரிக்கு செல்லத் தொடங்கியுள்ளது.

தற்போது ஏரியின் கிழக்கு புறக்கழுங்கு மேற்கு கழங்கில் உபரிநீர் வெளியேறுவதால் அந்தியூர் நகரின் முக்கிய வீதிகளான பெரியார் நகர், கண்ணப்பன் கிணற்று வீதி, நேருநகர் உள்ளிட்ட பகுதிக்குள் நீர் வரும் என்பதால், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, பொறியாளர் தமிழ் பாரதி, வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில்  தொடர் கண்காணிப்பில் சில இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணை மற்றும் எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், அந்தியூர் பெரிய ஏரி, ராசாங்குளம், சந்தியபாளையம், வேம்பத்தி, ஆப்பக்கூடல் ஆகிய ஏழு ஏரிகள் முக்கிய நீர் நிலைகளாக உள்ளன. தற்போது கெட்டிசமுத்திரம் மற்றும் அந்தியூர் பெரிய ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரால் ராசாங்குளம், சந்திபாளையம் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தியூர் பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுவதை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வேடிக்கை பார்த்து சென்றனர்.

Related Stories: