பாலியல் தொல்லை இருந்தால் மாவட்ட நிர்வாகத்துக்கு வாட்ஸ்அப் எண்ணில் தெரியப்படுத்துங்கள்; கரூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை.!

கரூர்: “பாலியல் ரீதியில் உங்களை யாரேனும் துன்புறுத்தினால், மாவட்ட நிர்வாகத்துக்கு வாட்ஸ்அப் எண்ணில் தெரியப்படுத்துங்கள்  என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று முன் தினம் இரவு பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருந்த சம்பவம், மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கரூரில் கல்லூரி மாணவி ஒருவரும் தூக்கிட்டு உயிரிழந்தார். இவர் என்ன காரணத்திற்காக தூக்கிட்டு உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாவட்டத்திலுள்ள மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில் “பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் மன வேதனைக்குரியதாகும். பாலியல் வன்முறையை செய்யக்கூடிய நபரே இங்கு தவறிழைத்தவர்கள் மற்றும் தண்டனைக்குரியவர்கள். அவர்களே சட்டப்படி குற்றவாளிகள் என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவே, பாதிப்புக்குள்ளான பெண் குழந்தைகள் எந்தவிதத்திலும் தங்களுக்குள் குற்ற உணர்வினை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

எனவே உங்கள் மீதோ அல்லது உங்கள் தோழிகள் மீதோ பாலியல் வன்முறை நிகழ்வதை அறிந்தால் நீங்கள் அச்சப்படவோ, மனவேதனையடைந்து உங்களை நீங்களே தனிமைபடுத்திக் கொள்ளவோ அல்லது தற்கொலை என்ற தவறான முடிவுக்கோ போகவேண்டிய அவசியமில்லை. நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். உங்களுக்கு தேவை, சரியான ஆலோசனை மற்றும் முதலுதவி மட்டுமே என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒருவேளை உங்கள் மேல் பாலியல் வன்முறை நடந்தால் தாயிடமோ அல்லது நம்பிக்கைக்குரியவரிடமோ தெரியப்படுத்தி அவர்களது உதவியை நாடுங்கள். உங்கள் ரகசியத்தை பாதுகாக்கக்கூடிய நபராக அவர் இருக்க வேண்டும்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் உதவியையோ நாடவிரும்பினால் தயக்கமின்ற எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இதற்கென உங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட இலவச அவசர தொலைபேசி எண் 1098 என்ற Child Line எண்ணை தொடர்புகொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பும் ஆலோசனையும் வழங்க நாங்கள் காத்திருக்கின்றோம். நீங்கள் 1098 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கும் போது உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் உங்களை பற்றிய விவரங்கள் யாரிடமும் பகிரப்படமாட்டாது. நீங்கள் எங்களோடு பேசவிரும்பினால் 8903331098 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு Hi என்ற குறுஞ்செய்தியை மட்டுமே அனுப்பினால் போதுமானது.

நாங்களே உங்களை தொடர்புகொண்டு உங்கள் தேவையை அறிந்து உதவி செய்கிறோம். நம் கரூர் மாவட்டத்தில் உங்களுக்காக விரைந்து வந்து உதவி செய்ய நானும், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அதிகாரிகளும் தயாராக இருக்கிறோம். இந்த தகவலை நீங்கள் தவறாமல் உங்களின் நண்பர்களுக்கும் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன் . நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு நம் கரூர் மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பு மிகுந்த மாவட்டமாக உறுதி செய்திடுவோம்” என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: