திருப்பதி லட்டு சர்ச்சை.. கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்!!

திருப்பதி: திருப்பதி கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை என்று ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் குஜராத் ஆய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் நெய்யில் 37 சதவீதம் கொழுப்பு கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜெகன் மோகன் ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கி பெறப்பட்ட நெய்யில் சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளி விதை, பருத்தி விதை, மீன் எண்ணெய், பாமாயில் மற்றும் மாட்டிறைச்சி, பன்றி கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு வரும் புதன்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என ஆந்திர உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்தது எனவும், ராஜ் பால் என்ற பெயரில் பால் சப்ளை செய்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஜூன் மாதமே ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தரமற்ற நெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்ததோடு, இருப்பில் இருந்த நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

இந்நிலையில், திருப்பதி கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை என்று ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூறியதாவது; ஜூன், ஜூலை மாதத்தில் ஏ.ஆர்.டெய்ரி மட்டும் அல்ல பல்வேறு நிறுவனங்கள் திருப்பதிக்கு நெய் அனுப்பியுள்ளன. நாங்கள் ஜூலையில் அனுப்பிய நெய் தொடர்பாக உரிய விளக்கத்தை கொடுத்து விட்டோம். திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜூன், ஜூலை மாதத்தில் நெய் அனுப்பினோம். திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக கூறப்படும் நெய்யில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை. எங்களது தயாரிப்புகளை எடுத்துச் சென்று எங்கு வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

The post திருப்பதி லட்டு சர்ச்சை.. கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: