அனைத்தும் கட்டுக்கதை… கடவுளின் பெயரால் அரசியல்; சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை திசை திருப்பவே லட்டு சர்ச்சை: ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு

திருமலை: திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது; எனது ஆட்சிக் காலத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதை. சந்திரபாபு முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். ஒவ்வொரு 6 மாதமும் நெய் வாங்குவதற்கு ஆன்லைனில் டெண்டர் விடுவது வழக்கம்.

6 மாத டெண்டரில் தரம் பார்த்து வாங்குவதில் எதையும் நாங்கள் மாற்றவில்லை. மாதிரி பரிசோதனைக்கு சான்றிதழ் வழங்கியபிறகுதான் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும். ஒவ்வொரு டேங்கரில் வரும் நெய்யும் NAPL சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். சான்றிதழ் பெற்றாலும் 3 வித சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படும். இத்தனை சோதனைக்கு பிறகும் அனுமதிக்கப்படும் நெய்யில் கலப்படம் என்பது கட்டுக்கதை இல்லையா?. முந்தைய சந்திரபாபு. நாயுடு ஆட்சியில் 15 முறை தரமற்ற நெய் நிராகரிக்கப்பட்டது.

எனது ஆட்சிக் காலத்தில் 18 முறை தரமற்ற நெய் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடவுளை கூட அரசியலுக்குள் இழுத்து வந்து திசைதிருப்பும் வல்லமை படைத்தவர் சந்திரபாபு நாயுடு. லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக பொய் புகார் கூறுவது தர்மமா?, நியாயமா? உலக தரம் வாய்ந்த தரக்கட்டுப்பாட்டுடன் இயங்கி வரும் ஒரு உலகின் முதன்மையான கோயில் பற்றி ஒரு முதல்வர் இப்படி அவதூறு கூறலாமா?. ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. அனைத்து வகைகளிலும் தோல்வி அடைந்துள்ள சந்திரபாபு நாயுடு அரசு, மக்களை திசை திருப்பும் அரசியலை செய்கிறது.

அரசியலுக்காக கடவுளின் பெயரை சந்திரபாபு பயன்படுத்துவது கீழ்த்தரமானது. சந்திரபாபு நாயுடு தன் கற்பனைகளுக்கு இறக்கை கட்டி பறக்க விடலாமா?. ஜூலை 12 சாம்பிள் எடுக்கப்பட்ட தினத்தில் சந்திரபாபு நாயுடு தான் முதலமைச்சராக இருந்தார். டெஸ்ட் எடுத்த பின், இத்தனை நாட்கள் சந்திரபாபு நாயுடு மௌனம் காத்தது ஏன்?. மும்பையில் ஒரு நடிகை விவகாரத்தை கையில் எடுத்து, அதை கூட திசைதிருப்பினார் சந்திரபாபு நாயுடு. விவசாயிகள், மாணவர்களுக்கு சந்திரபாபு நாயுடு அரசு எதுவுமே செய்யவில்லை

ஓய்வூதியம் வரை வீடு தேடிச் சென்று நாங்கள் வழங்கினோம்; ஆனால் சந்திரபாபு அரசு எதையுமே செய்யவில்லை. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சந்திரபாபு நாயுடு அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கின்றன. நிர்வாக திறன் இல்லாததால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளம் வந்தது. விஜயவாடா வெள்ள தடுப்பு பணிகளுக்கு நூற்றுக்கணக்கான படகுகள் ஒரே நாளில் எப்படி வந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.

 

The post அனைத்தும் கட்டுக்கதை… கடவுளின் பெயரால் அரசியல்; சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை திசை திருப்பவே லட்டு சர்ச்சை: ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: