சென்னை: மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளின் கல்வி உதவி தொகையை இருமடங்காக உயர்த்தி ரூ.14.90 கோடி அனுமதியளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், ஆராய்ச்சி படிப்பிற்கு ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்க அனுமதி அளித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார்.
அதாவது, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.1000 என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.2 ஆயிரம் என்றும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.6 ஆயிரம் என்றும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.8 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.6 ஆயிரம் என்பதை ரூ.12 ஆயிரம் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேற்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.7 ஆயிரம் என்பதை ரூ.14 ஆயிரமாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். உயர்த்தப்பட்ட இந்த கல்வி உதவிக்காக ரூ.14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் அனுமதித்து ஆணை பிறப்பித்துள்ளார்.
தற்போது பள்ளி, கல்லூரி படிப்புகளுடன், மாற்றுத் திறனாளி மாணவ- மாணவியர் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்னும் விழைவோடு ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஊக்கமளிப்பதற்காக முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்து இம்மாதம் 10ம் தேதி உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இந்த உத்தரவின் பயனாக தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர் வாழ்வில் ஊக்கம் பெறுவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.1000 என்பதை இரு மடங்கு உயர்த்தி ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும்.
* 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் என்பதை இரு மடங்காக உயர்த்தி ரூ.6 ஆயிரமாக வழங்கப்படும்.
The post மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு: ரூ.14.90 கோடி வரை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.