எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை; மோடி பிரதமராக இருக்கும் வரை அவருடன் இருப்பேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் கருத்து


டெல்லி: எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை; மோடி பிரதமராக இருக்கும் வரை அவருடன் இருப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் கூறினார். பீகாரை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் பஸ்வான்) தலைவரும், ஒன்றிய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சருமான சிராக் பஸ்வான், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ் நாடு தொடர்ந்து சரியான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மோடி பிரதமராக இருக்கும் வரை நான் அவருடன் இருப்பேன்.

சர்வதேச அளவில் நமது நாட்டின் மதிப்பை உயர்த்தி உள்ளார். எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை. ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட தலைவராக மோடி விளங்குகிறார். மோடியுடனான எனது உறவு மிகவும் வலுவாக உள்ளது. ஒன்றிய பாஜக கூட்டணியில் இல்லாதபோதும், மோடியுடன் எனக்கு தனிப்பட்ட நட்பு உண்டு. பீகாரில் எங்களது கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. பாஜகவின் ஆதரவுடன் சரியான பாதையில் செல்கிறோம். லோக் ஜனசக்தி கட்சியை தேசியக் கட்சியாக்க என் தந்தை ராம்விலாஸ் பஸ்வான் விரும்பினார். பீகாரில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பீகாரில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

சமீப காலமாக ஒன்றிய அரசு சில கொள்ைக முடிவுகளில் பின்வாங்கியது. வக்ஃப் வாரியம், இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் போன்ற விசயங்களில் கூட்டணி கட்சி என்ற முறையில் எனது கருத்தை நேர்முறையாக அணுகினோம். பாஜக கூட்டணி ஆட்சியில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று கூறுவது தவறு. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மோடி அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஆதரிக்கிறோம். வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமானால், ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்’ என்றார்.

The post எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை; மோடி பிரதமராக இருக்கும் வரை அவருடன் இருப்பேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: