திண்டிவனத்தில் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சி தேர்தலில் பாமகவினர் விலை போய்விட்டனர்: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனம்: திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது: உங்களை பார்க்கும்போது எனக்கு உற்சாகம். என்னை பார்க்கும்போது உங்களுக்கு உற்சாகம். ஆனால் தேர்தல் வந்தால் அது ஓட்டாக மாறவில்லை. செஞ்சி தொகுதி பாமகவின் கோட்டை. தற்போது கோட்டை விட்டுவிட்டு கட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். 42 ஆண்டு காலத்தில் 32 ஆண்டுகள் கட்சி தொடங்கி ஒருமுறைகூட ஆட்சி செய்யவில்லை என்ற கோளாறு மக்களிடமா அல்லது பொறுப்பாளர்களிடமா அல்லது கட்சிக்கு தலைமை தாங்குகின்ற, கட்சி ஆரம்பித்து 42 ஆண்டு காலம் உங்களோடு பயணித்து வந்து கொண்டிருக்கிற என்னிடமா. எங்கே கோளாறு என்பதை கண்டறிய வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் நமது வேட்பாளர்கள் சோரம் போனார்கள். ஏன் போனார்கள் என்று கேட்டால், அவர்கள் பணம் கொடுக்கிறார்கள், நீ என்ன கொடுக்கிற என கேள்வி கேட்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து அரசியல் பயிலரங்கத்தை நடத்தி உங்களுக்கு பயிற்சி நடத்தி வருகிறேன். எல்லாம் பழங்கதை ஆனதே. இன்னும் நான்கு ஆண்டு காலம் இருக்கிறது அதற்குள்ளாக கட்சியை பலப்படுத்த வேண்டும். இனி வரும் தேர்தல்களில் திண்ணை பிரசாரம் மற்றும் சோசியல் மீடியாக்களின் மூலம் மக்களை சந்தித்து பாமகவிற்கு வாக்களிக்க வேண்டுமென அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஜி.கே மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: