சையத் முஷ்டாக் அலி டிராபி பைனலில் தமிழகம்: கர்நாடகாவுடன் நாளை பலப்பரீட்சை

புதுடெல்லி: சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை அபாரமாக வென்ற தமிழக அணி பைனலுக்கு முன்னேறியது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் தமிழகம் - ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீசியது. சரவண குமாரின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுக்க, அந்த அணி 18.3 ஓவரில் வெறும் 90 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

8வது வீரராகக் களமிறங்கிய தியாகராஜன் அதிகபட்சமாக 25 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். உதிரியாக கிடைத்த 11 ரன் தான் அடுத்த அதிகபட்சமாக அமைந்தது. தமிழக பந்துவீச்சில் சரவண குமார் 3.3 ஓவரில் 2 மெய்டன் உள்பட 21 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். முருகன் அஷ்வின், முகமது தலா 2, சாய் கிஷோர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 91 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழகம், 14.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன் எடுத்து அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியது. தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் 14, நாராயண் ஜெகதீசன் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சாய் சுதர்சன் 34 ரன் (31 பந்து, 4 பவுண்டரி), கேப்டன் விஜய் ஷங்கர் 43 ரன்னுடன் (40 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரோஹன் அதிரடி: மற்றொரு அரையிறுதியில் விதர்பா - கர்நாடகா மோதின. டாஸ் வென்ற விதர்பா முதலில் பந்துவீச, கர்நாடகா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் ரோஹன் கடம் - கேப்டன் மணிஷ் பாண்டே முதல் விக்கெட்டுக்கு 15 ஓவரில் 132 ரன் சேர்த்தனர். ரோஹன் 87 ரன் (56 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), மணிஷ் 54 ரன் (42 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேறினர். கருண் நாயர் 5 ரன் எடுக்க, நல்கண்டெ வீசிய கடைசி ஓவரில் ஜோஷி (1), ஷரத் (0), சுசித் (0 ஹாட்ரிக்) மற்றும் அபினவ் மனோகர் 27 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

விதர்பா பந்துவீச்சில் நல்கண்டே 4, லலித் யாதவ் 2, யஷ் தாகூர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய விதர்பா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்டது. டெல்லியில் நாளை நடக்கும் பைனலில் தமிழகம் - கர்நாடகா மோதுகின்றன.

Related Stories: