கிருஷ்ணகிரி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்-விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பாசனத்தை கொண்டு பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டணம் உள்ள 16 பஞ்சாயத்துகளில் நேரடியாக 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணை நீர்பாசனத்தை நம்பி முதல்போக சாகுபடியாக நெற்பயிர்களை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டிருந்தனர்.

அனைத்து நெற்பயிர்களும் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் தொடர் மழையால், நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், நேற்று காலை கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், கிருஷ்ணகிரி நகரை சுற்றியுள்ள சின்னஏரி, புதூர் ஏரி, தேவசமுத்திரம் ஏரி என அனைத்து ஏரிகளும் நிறைந்து, தண்ணீர் வழிந்தோடி, அவதானப்பட்டி ஏரியை சென்றடைந்தது.

அவதானப்பட்டி ஏரியை சென்றடைந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவதானப்பட்டி ஏரியில் இருந்து திம்மாபுரம் ஏரிக்கு செல்லும் கால்வாய் முழுவதும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பு அதிகம் இருந்ததால், அதில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் அருகில் இருந்த நெல் வயல்களுக்குள் சென்றது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியும், வயலில் சாய்ந்தும் நாசமானது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பல ஆயிரம் செலவு செய்து பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும், எதிர்பாராத இந்த மழையால் நீரில் மூழ்கி நாசமானது. எனவே, அரசு இதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: