சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னையில் இருந்து புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர் குழு, மோப்பநாய், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததால் விமானம் 10.40க்கு புறப்பட்டது.

சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு கிளம்ப இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இன்று இண்டிகோ விமானம் ஒன்று கிளம்ப இருந்தது. 182 பயணிகள் இந்த விமானத்தில் பயணிக்க இருந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்ததைத் தொடர்ந்து விமான புறப்படுவதற்கு தயாராக இருந்தது. துரைப்பாக்கத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்தை இணையத்தில் தொடர்பு கொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கும் ஒரே நேரத்தில் மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக விமானத்தின் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் விமானம் முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் 10.40 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு கிளம்பிச் சென்றது.

 

The post சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: