தாய்ப்பால் விற்பனை புகார்: அரும்பாக்கத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை

சென்னை; தாய்ப்பால் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் சென்னை அரும்பாக்கம் பகுதியில் சோதனை நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக தாய்ப்பால் நேரடியாக விற்பனை செய்யப்படுவதாகவும், பல இடங்களில் தாய்ப்பால் என்ற பெயரில் பவுடர் பாலும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மாதவரம் தபால்பெட்டி கே.கே.ஆர் கார்டன் பகுதியில் தாய்ப்பால் பாட்டில்களில் அடைத்து சட்டவிரோதமாக விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கே.கே.ஆர் கார்டன் பகுதியில் உள்ள கடையில் சோதனை நடத்தினர். பதப்படுத்தபட்ட தாய்ப்பால் 200 மி.லி பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் செம்பியன் முத்தையா என்பவரிடம் நடத்திய விசாரணையில், புரோட்டின் பவுடர் விற்பனை செய்யும் கடை நடத்துவதற்கு அனுமதி பெற்று, தாய்ப்பால் தானம் செய்யும் தாய்மார்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலம் தாய்ப்பாலை வாங்கி அதில் மூலப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தி இடைத்தரகர்கள் மூலம் தாய்ப்பால் வராத பெற்றோர்களுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 500க்கும் மேற்பட்ட பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத்துறை 18 குழுக்களை அமைத்தது. அரும்பாக்கத்தில் உள்ள ஆர்.கே.பார்மா என்ற தனியார் மருந்து நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் மருந்து நிறுவனத்தில் பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post தாய்ப்பால் விற்பனை புகார்: அரும்பாக்கத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: