வைகையில் வெள்ளப்பெருக்கு மதுரை தரைப்பாலம் மூழ்கியது

மதுரை : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நீர்வரத்து, நேற்று முன்தினம் வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்தது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 3,254 கனஅடி நீர் வரத்து இருந்தது. இந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. வைகையாற்றின் வழியாக வினாடிக்கு 1,835 கன அடி, கால்வாய் வழியாக வினாடிக்கு 1,200 கன அடி, 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி, மதுரை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையில் திறந்து விடப்பட்டுள்ள நீரால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரை ‘கல் பாலம்’ எனப்படும் யானைக்கல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்,  அணுகு சாலையை ஒட்டி இரு கரை தொட்டு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால், ஆற்றின் இருபுறமும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் என்பதால் வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: