திருவண்ணாமலையில் நாளை முதல் 20ம்தேதி வரை தரிசனம், கிரிவலத்திற்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபவிழா கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் சுவாமிகள் வாகனங்களில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்து வருகின்றனர். தீபத்திருவிழாவின் 6ம் நாளான நேற்றிரவு 8 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி விமானங்களில் பவனி வந்து அருள்பாலித்தனர். ஆண்டுதோறும் 6ம் நாள் இரவு உற்சவத்தில் வெள்ளித்தேரில் சுவாமி எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து அருள்பாலிப்பது வழக்கம்.

ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தொடர்ந்து 2வது ஆண்டாக நேற்றும் வெள்ளித்தேரோட்டம் மற்றும் மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டது. வரும் 19ம்தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக, தீபத்திருவிழாவுக்கு கடந்த ஆண்டைப்போலவே இந்தாண்டும் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்திருக்கிறது.

அதன்படி நாளை பகல் 1 மணியில் இருந்து வரும் 20ம்தேதி வரை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் இ-டிக்கெட் பெறவும் முடியாது. ஏற்கனவே உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையும் இந்த நாட்களில் பயன்படுத்த முடியாது. வரும் 20ம்தேதி வரை கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகா தீப பெருவிழா முடிந்ததும், 21ம்தேதி முதல் 23ம்தேதி வரை இ-டிக்கெட் மற்றும் அனுமதி அட்டையை பயன்படுத்தி கோயிலில் தரிசனம் செய்யலாம். 23ம் தேதிக்கு பிறகு வழக்கம் போல பொது தரிசனம் அனுமதிக்கப்படும்.

கோயிலின் அனைத்து நுழைவு வாயில்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆளில்லா குட்டி விமானங்களை (ஹெலிகேம்) பறக்கவிட்டு, கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி தலைமையில், 3 டிஐஜிக்கள், 7 எஸ்பிக்கள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நாளை முதல் ஈடுபட உள்ளனர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க, திருவண்ணாமலையை இணைக்கும் பிரதானமான 9 சாலைகளிலும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் (18ம்தேதி) முதல் 21ம் தேதி அதிகாலை வரை, திருவண்ணாமலை நகருக்கு வெளியே 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாத நிலையில், வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும், நகருக்குள் வர இயலாத நிலையில் தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து நகருக்குள் வர இலவச டவுன் பஸ் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10ம்தேதி முதல் நடந்து வருகிறது. வரும் 19ம்தேதி மகா தீப பெருவிழா நடைபெறுகிறது. அதையொட்டி, வரும் 19ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. எனவே, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாது. அதற்கு மாற்றாக, டிசம்பர் 4ம்தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும். மேலும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 19ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: