லக்கிம்பூர் வன்முறை வழக்கு விவகாரம் ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் எஸ்ஐடி விசாரணை: உ.பி அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல்

புதுடெல்லி: உ.பி. மாநிலத்தில் நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுப்படை விசாரணை நடைபெற எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில்  ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகளும், அதன் பின்னர் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வுப்படை விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக தாமாக முன் வந்து விசாரணையை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உ.பி அரசின் விசாரணையில் அதிருப்தி தெரிவித்தது. நாங்கள் எதிர்ப்பார்த்த திசையில் வழக்கு செல்லவில்லை என்பதால், இதுதொடர்பான வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரிக்கலாமா? என கேள்வியெழுப்பி இருந்தது. இதுகுறித்து உ.பி அரசு பதிலளிக்க கடந்த 12ம் தேதி வரை அவகாசம் வழங்கியிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது உத்தரப்பிரதேச அரசு சார்ப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே,‘லக்கிம்பூர் வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி ரமணா, ‘இவ்வழக்கை கண்காணிக்க பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினிடம் பேசி வருவதாகவும், நாளைக்குள்(இன்று) உறுதி செய்யப்பட்டு புதன்கிழமை(நாளை) அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் அருண் பரத்வாஜ், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியையும் பரிந்துரை செய்யலாம்? என கோரிக்கை வைத்தார்.அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தங்களது பரிசீலனையில் அதுவும் இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும் ஏற்கனவே உத்திரப்பிரதேச அரசு அமைத்துள்ள விசாரணை குழுவில் உயர் அதிகாரிகளை நியமித்து அவர்களின் பெயரை உச்ச நீதிமன்றத்தில் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதையும் நாளை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும், இந்த குழுவில் இடம்பெற போகும் அதிகாரிகள் உ.பியை சொந்த மாநிலமாக கொண்டவர்களாக இருக்க கூடாது. பெகாசஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பை அமைத்தது போல, லக்கிம்பூர் வழக்கிலும் அதே கவனத்துடன்  வழக்கு ஒப்படைக்கப்படும் என தலைமை நீதிபதி  தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: