திருப்புகழ் தலைமையிலான குழுவுக்கு வரவேற்பு மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆராய பாஜ சார்பில் குழு நியமனம்: சி.டி.ரவி, கே.அண்ணாமலை ஆகியோர் கூட்டாக பேட்டி

சென்னை: மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆராய பாஜ சார்பில் குழு நியமனம் செய்துள்ளோம் என்று சி.டி.ரவி, கே.அண்ணாமலை ஆகியோர் கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மண்டல அளவிலான தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி, தமிழக இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.சம்பத், காயத்ரி தேவி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் சி.டி. ரவி, கே.அண்ணாமலை ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மாநில அரசு, 2016-17ம் ஆண்டில் இருந்து இருந்து வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும். மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி பயிர்கடனை ரத்து செய்வதுதான். மழை வெள்ள பாதிப்பு போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது வரவேற்கவேண்டிய விஷயம். மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பாஜ சார்பிலும் ஒரு குழு நியமித்துள்ளோம். பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நாளை (இன்று) முடிவடைகிறது.

இதனை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கவேண்டும். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 24ம் தேதி கோவை வருகிறார். அங்கிருந்து திருப்பூருக்கு செல்லும் அவர் திருப்பூர் பாஜ அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இதேபோல் திருப்பத்தூர், ஈரோடு, நெல்லை பகுதிகளிலும் பாஜக அலுவலகங்களை திறந்து வைக்க உள்ளார். மத்திய இணை மந்திரி எல்.முருகன் சென்னை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழை வெள்ள பாதிப்பு தொடர்பான தகவல்களை மத்திய அரசிடம் கொண்டு சென்றிருக்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: