தமிழகத்தின் வடமாவட்டங்களில் செல்வாக்குமிக்க கட்சியான பாமக இத்தேர்தலில் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இதனால் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை கடந்து எந்தப் பக்கம் சாய்வது என முடிவெடுக்க முடியாத சூழலில் ராமதாஸ் சிக்கியிருக்கிறார். இந்த சூழலில் தலைமை நிர்வாக குழுவை திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கூட்டினார். முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில் காலை 10 மணி அளவில் தொடங்கிய கூட்டம் 7 மணி நேரம் கடந்தும் நீடித்தது.
அப்போது பாதியிலேயே வெளியேறிய சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், ஏப்ரல் 6ம்தேதி வரை அவகாசம் இருக்கிறது. எங்களில் பலரை எம்எல்ஏக்களாக சட்டபேரவைக்கு அவர் அனுப்பி வைப்பார் எனக் கூறிவிட்டு கிளம்பினார். அதன்பிறகு கூட்டம் முடிந்து இரவு 8 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜிகே மணி, 2 அமர்வுகளாக இந்த கூட்டம் நடந்தது, எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை என சொல்ல முடியாது. கட்சி நிலை இப்போது சரியாக இல்லாததால் நெருக்கடியாக உள்ளது எனக் கூறினார்.
இருப்பினும் 7 மணி நேரமாக நடந்த கூட்டத்திற்கு பிறகும் ராமதாஸ் கூட்டணி தொடர்பாக எதுவும் அறிவிக்காதது அக்கட்சியினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக என யாரும் கண்டுகொள்ளாத நிலையில் தொடர்ந்து பாமக ராமதாஸ் தலைமையிலான அணியில் குழப்பமான சூழல் நிலவுவதால் கூட்டம் முடிந்து திரும்பிய நிர்வாகிகள் முகம் வாடிய நிலையில் காணப்பட்டனர். இதனால் பாமக ராமதாஸ் அணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
