சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

 

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேர்காணல் நடத்தினார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து நேற்று முன்தினம் முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது. முதல் நாள் அன்று புதுச்சேரி மாநிலத்திற்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து 2வது நாளாக நேற்று தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெற்றது.

தொடர்ந்து 3வது நாளாக இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான நேர்காணல் நடந்தது. போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த வேட்பாளர்கள் அனைவரையும், தொகுதி வாரியாக அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார். அப்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டிருந்தார்.

இந்த நேர்காணலின் போது கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து வருகிற 22ம் தேதி வரை நேர்காணல் நடைபெறுகிறது. இறுதி நாளில் கடலூர்,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டத்துக்கான நேர்காணல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: