புதுச்சேரி தேஜ கூட்டணி புட்டுக்குமா? எம்எல்ஏக்களுடன் ரங்கசாமி ஆலோசனை

 

புதுச்சேரி: புதுச்சேரி தேஜ கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், என்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் ரங்கசாமி இன்று மீண்டும் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புதுச்சேரியில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் என்ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணியே தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டணியில் லஜக உள்ளிட்ட புதிய கட்சிகள் எதையும் சேர்க்கக் கூடாது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியை அளிக்க வேண்டுமென்ற நிபந்தனையை முதல்வர் ரங்கசாமி விதித்தார்.

இதனிடையே, டெல்லியில் நேற்றிரவு பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் நித்தின் நபின் தலைமையில் நடந்த பாஜ பார்லிமென்டரி போர்டு கமிட்டி கூட்டத்தில் புதுச்சேரி மாநில பாஜ தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் புதுச்சேரி அரசியல் நிலவரம், கூட்டணியில் முதல்வர் ரங்கசாமி வைத்துள்ள நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பரபரப்பான குழப்பமான அரசியல் சூழலில் முதல்வர் ரங்கசாமி எந்தவொரு முக்கியமான முடிவை எடுப்பதென்றாலும் சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு வந்து சாமிகும்பிட்டு எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி, சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு நேற்று இரவு 8 மணிக்கு முதல்வர் ரங்கசாமி சென்றார். அப்பா பைத்தியம் சாமிக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார். சற்குரு சிலையின் காதில் மெதுவாக பேசி தன்வேண்டுதலை தெரிவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் அவரது கையாலேயே பிரசாதமும் வழங்கினார். பின்னர் கோயில் அறையில் சாப்பிட்டு விட்டு வந்து, மீண்டும் சாமிக்கு பூஜைகளை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் சற்குரு ஆட்சி தொடரும். பாஜவிடம் எங்கள் நிலைப்பாட்டை சொல்லி விட்டோம். எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பதை கூட்டணி முடிந்தபிறகு சொல்வோம் எனக் கூறிவிட்டு புறப்பட்டார். ரங்கசாமி சேலம் சென்றிருந்த நேரம், அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை கூட்டத்தை புதுச்ேசரியில் நடத்தினர். இதில் கூட்டணி விவகாரம், யார், யார் வேட்பாளர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணி வரையிலும் வழக்கம்போல் ேகாரிமேட்டில் உள்ள தனது வீட்டை ஒட்டிய மைதானத்தில் எந்தவித டென்ஷனும் இல்லாமல் ஹாயாக வீரர்களுடன் இணைந்து முதல்வர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடினார். பின்னர் தனது கட்சி எம்எல்ஏக்களை வீட்டிற்கு அழைத்த முதல்வர் ரங்கசாமி அவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Related Stories: