மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு: தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடம் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக நாளை(15ம் தேதி) மாலை நடை திறக்கப்படுகிறது. 16ம் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடக்கும் மண்டல, மகர விளக்கு பூஜைகள் பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பெரும்பாலான மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவலை தொடர்ந்து பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் கடந்த மண்டல காலத்தில் மிககுறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். இந்த வருடம் பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா 2 டோஸ் தடுப்பூசி, ஆர்டிபிசிஆர் ெநகடிவ் சான்றிதழ் வைத்திருக்க ேவண்டும். இந்த நிலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக நாளை(15ம் தேதி) மாலை நடை திறக்கப்படுகிறது. அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. தொடர்ந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மறுநாள் (16ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கும். அன்று முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு ெசய்யும் பக்தர்கள் வராமல் இருந்தால் உடனே முன்பதிவு செய்யாத பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக நிலக்கல் பகுதியில் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடமும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிலக்கல் பகுதியில் தான் நிறுத்த வேண்டும். அங்கிருந்து கேரள அரசு பஸ் மூலம் தான் பம்பைக்கு செல்ல முடியும். டிரைவர் உள்ள வாகனங்களில் வரும் பக்தர்கள் பம்பை வரை செல்ல முடியும். அவர்களை அங்கு இறக்கிவிட்டுவிட்டு டிரைவர்கள் வாகனத்துடன் நிலக்கல்லுக்கு திரும்பி வந்துவிட வேண்டும். இந்த வருடம் சன்னிதானத்தில் தங்க அனுமதியில்லை.

Related Stories: