தடுப்பூசி போட மறுத்தால் கிரிமினல் வழக்கு: மத்தியபிரதேச கலெக்டர் தடாலடி

போபால்: தடுப்பூசி போட மறுப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ரவுலி மாவட்ட கலெக்டர் ராஜீவ் ரஞ்சன் மீனா வெளியிட்ட அறிக்கையில், ‘18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுதல் அல்லது தவிர்க்கும் நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும். வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் இரண்டு டோஸ்களும் அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பொது நிகழ்வுகள், ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர். உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குடிமை பொருள் துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தூர் நகரில் மட்டுமே 100 சதவீத மக்கள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 60 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் போட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற இடங்களில் மிககுறைந்தளவு மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: