பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு; சமாஜ்வாதி மாஜி அமைச்சருக்கு ஆயுள்: உ.பி சிறப்பு நீதிமன்றம் அதிரடி

லக்னோ: ெபண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரபிரதேச சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரபிரதேச மாநில முன்னாள் சுரங்கம் மற்றும் போக்குவரத்து  அமைச்சரும்,  சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான காயத்ரி பிரஜாபதி, அகிலேஷ் யாதவ்  முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தார்.

இவர், சுரங்க அமைச்சராக இருந்த  காலகட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்த குற்றச்சாட்டில் சிபிஐ  வழக்குபதிவு செய்துள்ளது. முன்னதாக சித்ரகூடத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த  2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி கவுதம் பள்ளி காவல் நிலையத்தில் அமைச்சர்  மீது பாலியல் புகார் அளித்தார்.  சுரங்கத்துறையில் வேலை வாங்கித் தருவதாக  கூறி சம்பந்தப்பட்ட பெண்ணை லக்னோவுக்கு வரவழைத்தனர். பின்னர், அந்த பெண்ணை  பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

அதேநேரம் அவரது மைனர் மகளையும் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக அம்மாநில டிஜிபி-யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பின்னர் அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு  மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மற்றும் சிலர் மீது கவுதம் பள்ளி போலீசார் கடந்த  2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி வழக்குப்பதிவு செய்து, மார்ச் 15ம் தேதி  கைது செய்தனர்.

இவ்வழக்கு லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைகள் முடிவுற்ற நிலையில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கூட்டாளிகள் ஆஷிஷ் சுக்லா மற்றும் அசோக் திவாரி ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்று குற்றவாளிகளுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 4 பேர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: