உயர்நீதிமன்றம் எழுப்பிய வினாவிற்கு பதில் எங்கே?: பழனிசாமிக்கு முரசொலி நாளேடு பதிலடி

சென்னை: சென்னை கொளத்தூரிலில் மழை பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்க்கு திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பதிலளித்து தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாத பழனிசாமிக்கு இப்போதுதான் மக்களை பற்றி கவலை வந்துள்ளது என விமர்சித்துள்ள முரசொலி, 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகு என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தீர்கள் என உயர்நீதிமன்றம் எழுப்பிய வினாவிற்கு பதில் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மழை வெள்ளத்தைக் காரணம் காட்டி கொள்ளை அடித்தோம் என்று தான் பழனிச்சாமியின் மனசாட்சி பதில் சொல்லும் என்றும், அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு தான் காரணம் தெரியும் ஆனால் அவர் ஆளையே காணவில்லை என்று முரசொலி சாடியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வெள்ள தடுப்பு பணிகளுக்காக அப்போதைய அதிமுக அரசால் ரூ.7744 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை முழுமையாக ஒழுங்காக ஊழல் செய்யாமல் செய்திருந்தாலே மழைநீர் தேங்கியிருக்காது என்றும் முரசொலி விமர்சித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் பருவமழைக்கு முன்பாக நீர்வழிப்பாதைகளை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதி எங்கே போனது என்று தெரியவில்லை என சாடியுள்ள முரசொலி நாளேடு, மாநகராட்சியின் விலைபட்டியலை விட 30% முதல் 50% வரை அதிகமாக விலை நிர்ணயித்து அதிமுக அரசு டெண்டர் ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. அதே போல மழைக்கால அவசர பணி என்று மழைநீர் வடிகால் எங்கெல்லாம் இல்லையோ அங்கெல்லாம் அமைப்பதற்காக அதிமுக ஆட்சியில் ரூ.440 கோடி டெண்டர் விடப்பட்டிருந்தது. ஆனால் நன்றாக இருந்த வடிகால்களை இடித்து 80% புதிய வடிகால்கள் அமைத்து மிகப்பெரிய மோசடியில் அதிமுக ஈடுபட்டுள்ளதாகவும் முரசொலி நாளேடு குற்றம்சாட்டியுள்ளது.

திமுக சார்பாகவும் அறப்போர் இயக்கம் சார்பாகவும் இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள முரசொலி நாளேடு, திமுக அரசை விமர்சிக்கும் முன் மழைநீர் வடிகால் என்ற பெயரில் பணம் சுருட்டியதற்கு முதலில் பழனிசாமி பதில் சொல்ல வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.                    

Related Stories: