வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர வட தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிந்து வருகின்றன. எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதையடுத்து, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் வெள்ள நீரில் சிக்கியவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கும் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன. இதனிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருவதால், இன்றும் நாளையும் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும். நாளை மாலைக்குள் கடலூரில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடலூர் - அருண் ராய், திருச்சி - ஜெயகாந்தன், வேலூர் - நந்தகுமார், நாகை - பாஸ்கரன், மதுரை - வெங்கடேஷ், ராணிப்பேட்டை - செல்வராஜ், திருவள்ளூர் - அனந்தகுமார், அரியலூர், பெரம்பலூர் - அனில் மேஷ்ராம், விருதுநகர் - காமராஜ், ஈரோடு - பிராபகர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: