சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில், போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதியில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த சித்திக், வடக்கு வட்டாரத்துக்கு கார்த்திகேயன், மத்தியவட்டாரத்திற்கு பங்கஜ் குமார் பன்சால், தெற்கு வட்டாரத்துக்கு கோபால் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். தாம்பரம், சோழிங்கநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலரான அமுதா நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியின் சார்பில், பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளுக்காக பாப்காட்-70, ஜே.சி.பி-21, தானியங்கி கனரக வாகனங்கள்-112, இலகுரக வாகனங்கள்-14, 570 நீர் இறைக்கும் பம்புகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 88 இடங்களில் நீர் இறைக்கும் பம்புகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் சென்னை துறைமுக கழகத்தில் இருந்தும் வேளாண் பொறியியல் துறையிலிருந்தும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான உணவு வழங்கும் வகையில் வருவாய்த் துறையின் சார்பில், வரி வசூலிப்பவர் அல்லது உரிம ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 7ம் 1,52,870 பேருக்கும், 8ம் தேதி 5,61,400 பேருக்கும், 9ம் தேதி காலையில் 1,96,600 பேருக்கும், மதியம் 2.15 லட்சம் பேருக்கும், இரவு 2,13,800 பேருக்கும் என 6,25,400 பேருக்கும், அதைத் தொடர்ந்து இன்று காலையில் 2,18,300 பேருக்கு என கடந்த மூன்று நாட்களில் 21,83,300 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க ஏற்கனவே 15 மண்டலங்களுக்கும் ரூ.3 கோடி வழங்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்கவைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மழையினால் பாதிப்பிற்கு உள்ளாக கூடிய நிலையில் உள்ள பழமையான கட்டடங்களை கண்டறிந்து அங்கு வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மழைக்கால வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 200 நிலையான மருத்துவ முகாம்கள் மற்றும் 8 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 16 சுரங்கப்பாதைகளில் 15 இடங்களில் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக எவ்வித நீர்த் தேக்கமுமின்றி போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது.மழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது. இதற்காக மாநகராட்சியின் வசம் விழுந்த மரங்களை அறுக்கும் கருவிகள் - 371, மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் - 2, தானியங்கி மரம் அறுக்கும் இயந்திரங்கள்-6 உள்ளன. அவசர மீட்பு பணிகளு ஒரு வார்டிற்கு ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக மீட்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 41 இடங்களில் பைபர் படகுகள் தயார் நிலையில் உள்ளன. மீன்வளத் துறை அலுவலர்களுடன் இணைந்து இந்த படகுகள் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மின்வெட்டு ஏற்படும் பொழுது மீட்பு பணிகள் மேற்கொள்ள 18 நடமாடும் உயர்கோபுர மின்விளக்குகள், 100 எண்ணிக்கையில் 2.5 கி.வா. டீசல் ஜெனரேட்டர்கள், 100 எண்ணிக்கையில் 3 கி.வா. டீசல் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.பருவ மழையை முன்னிட்டு ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையுடன் பிற சேவை துறைகள் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை துறையை சார்ந்த அலுவலர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் பருவமழை குறித்து கண்காணிக்கவும் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறவும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையில் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற 5 தொலைபேசி எண்களும், 9445025819, 9445025820, 9445025821, 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணும் செயல்பட்டு வருகிறது. 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 என்கின்ற உதவி எண் தற்போது மழை, வெள்ளத்தின் காரணமாக 30 இணைப்புகளாக மேம்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ் ஆப் எண்களிலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கம், மரக்கிளைகள் அகற்றுதல் மற்றும் இதரப் புகார்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கலாம். இதுவரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 7180 புகார்களில் 3,593 புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.