மாங்காடு பேரூராட்சியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் மக்கள் அவதி: பேரல்களை படகாக பயன்படுத்தும் அவலம்

குன்றத்தூர்: சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும், தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜனனி நகர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் தங்களது கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை வெளியே எடுக்க முடியவில்லை. இங்கு வசிக்கும் ஏராளமான மக்கள், தங்களது வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க, மாங்காடு பிரதான சாலை செல்ல, தங்களது வீடுகளில் உள்ள பெரிய பெரிய பிளாஸ்டிக் பேரல்களை ஒன்றாக கட்டி, படகு போன்று பயன்படுத்தி, அதன் மூலம் மெயின் ரோட்டுக்கு வருகின்றனர்.

பின் அங்கு, தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி விட்டு, மீண்டும் கேன் படகு மூலம் வீட்டிற்கு செல்கின்றனர். மாங்காடு பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, அருகில் உள்ள சீனிவாசபுரம் அரசுப்பள்ளி நிவாரண முகாம்களில் தங்க வைக்க அதிகாரிகள் அழைத்துச்செல்ல முயன்றபோது, மக்கள் அங்கிருந்து வெளியேற தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கொரோனா காலம் என்பதால் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், நிவாரண முகாம்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கொரோனா நோய் பரவக்கூடும் என்ற அச்சத்தால் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கும், பேரூராட்சி அரசு அதிகாரிகளுக்கும் இடையே சிறிதுநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பலத்த மழை பெய்யும் போதெல்லாம் ஜனனி நகர் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் மட்டும் எங்கள் பகுதிக்கு வருகை தரும் அரசு அதிகாரிகள், அதன் பிறகு எங்கள் பகுதியை கண்டு கொள்வதேயில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனக்கூறி அப்பகுதி பொதுமக்களில் சிலர் தங்களது வீடுகளை விட்டு காலி செய்யாமல், தொடர்ந்து அங்கேயே இருந்து வருகின்றனர். மேலும் சிலர் பாதுகாப்பு நலன் கருதி, தங்களது வீடுகளை காலி செய்து விட்டு, வேறு பகுதியில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

Related Stories: