அரையிறுதியிலும் இதே வேகத்தை தொடர்வோம்.! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டி

சார்ஜா: உலக கோப்பை டி.20 தொடரில் சூப்பர் 12 குரூப் 2 பிரிவில் சார்ஜாவில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 66(47பந்து), சோயிப் மாலிக் 54 (18 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்), ஹபீஸ் 31 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய ஸ்காட்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களே எடுத்தது. இதனால் 72 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. சோயிப் மாலிக் ஆட்டநாயகன் விருது பெற்றார். 5 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் குரூப் 2 பிரிவில் முதல் இடத்தை பிடித்தது. ஸ்காட்லாந்து 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. சூப்பர் 12 சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற ஒரே அணி பாகிஸ்தான் தான்.

வெற்றிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், நாங்கள் ஒருவருக்கொருவர் திறமையில் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாங்கள் ஒரு யூனிட்டாக விளையாடுகிறோம், எனவே நிலையான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். பவர்பிளேவில் எங்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஹபீஸ் என்னுடன் சிறந்த பார்ட்னர் ஷிப் அமைத்தார். மாலிக் தனது அனுபவத்தை பயன்படுத்தி இறுதிவரை சிறப்பாக விளையாடினார். நாங்கள் விளையாடிய விதத்தில் எங்களுக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. அரையிறுதியிலும் இதே வேகத்தில் தொடர விரும்புகிறோம். நிச்சயமாக துபாய் சிறந்த மைதானங்களில் ஒன்றாகும். நாங்கள் அங்கும் இங்கும் உள்ள ரசிகர்களையும் நேசிக்கிறோம். அவர்கள் வந்து எங்களை உற்சாகப்படுத்தும் விதம் அற்புதம், என்றார்.

Related Stories: