ஷாருக்கானின் மகன் கைது விவகாரம்: ரூ.1.25 கோடி கேட்டு அமைச்சர் மீது அவதூறு வழக்கு.! சமீர் வான்கடேயின் தந்தை முறையீடு

மும்பை: ஷாருக்கானின் மகன் கைது விவகாரத்தில் அவதூறு கருத்துகளை கூறிவருவதாக கூறி அம்மாநில அமைச்சருக்கு எதிராக ரூ.1.25 கோடி கேட்டு சமீர் வான்கடேயின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதை ெபாருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இவர் நீதிமன்ற உத்தரவுபடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். ஆர்யன் கான் கைது விவகாரத்தில் விசாரணை அதிகாரி சமீர் வான்கடேவுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாநில அமைச்சருமான நவாப் மாலிக் தொடர்ந்து பரபரப்பு புகார் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சமீர் வான்கடேயின் தந்தை தின்யன்தேவ் வான்கடே, அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதில், நவாப் மாலிக் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தனது மகன் சமீர் வான்கடே மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வரும் நவாப் மாலிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ரூ. 1.25 கோடி இழப்பீடு தரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ளது. இதனிடையே இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய நவாப் மாலிக், ‘சொகுசு கப்பலில் பயணம் செய்வதற்கு ஆர்யன் கான் டிக்கெட் கூட வாங்கவில்லை. ஆர்யன் கானை சொகுசு கப்பலுக்கு அழைத்தவர்கள் பிரதிக் கபா, அமீர் ஆகியோர்தான். ஆர்யன்கானை கடத்தி பணம் பறிக்கத்தான் அவர் சொகுசு கப்பலுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பாஜகவின் மொகித் இந்த கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் கூட்டாளியாக மொகித் கம்போஜ் செயல்பட்டுள்ளார். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது முதல் ஷாருக்கான் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தார். இந்த விவகாரத்தில் ஷாருக்கான் மவுனம் கலைக்க வேண்டும். ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பின்னர் சமீர் வானகடேவும் மொகித் கம்போஜும் கல்லறை ஒன்றில் அக். 7ல் சந்தித்து பேசினர். போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் சர்ச்சைக்குரிய சாம் டிசோசா தொலைபேசியில் பேசிய உரையாடல்களையும் நான் வெளியிட்டுள்ளேன். ஆனால் சாம் டிசோசா கைது செய்யப்படவில்லை. பாஜகவின் சதித் திட்டங்களுக்கு எதிராகவே போராடுகிறேன்’ என்றார்.

Related Stories: