கம்பத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி

கம்பம் : கம்பத்தில் ரோமன் கத்தோலிக்க பேராலய கல்லறை வளாகம் மற்றும் சி.எஸ்.ஐ பேராலய கல்லறை வளாகத்தில் கல்லறை திருநாளையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

ஆண்டுதோறும் நவ.2ம் தேதியை இறந்தவர்களை நினைவுகூரும் கல்லறை திருநாளாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர்.இது அனைத்து ஆன்மாக்கள் தினம் என அழைக்கப்படுகிறது. இந்த திருநாளில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்லறைகளை மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கின்றனர். பின்னர் அவர்களின் ஆன்மா இளைப்பாற ஜெபம் செய்வர்.

அதன்பின் கல்லறைத் தோட்டங்களில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. நேற்று கல்லறை திருநாளை முன்னிட்டு, கம்பத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில், கம்பம் பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ் தலைமையில், இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக, அவர்களுக்காக இறை வேண்டல் நிறைவேற்றப்பட்டு, புனித நீரால் கல்லறைகள் மந்திரிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் மற்றும் கம்பம் பங்கைச் சேர்ந்த குழந்தையேசு அன்பியம், புனித அன்னை தெரசா அன்பியம், புனித ஆரோக்கிய அன்னை அன்பியம், புனித செபஸ்தியார் அன்பிய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உத்தமபாளையம்

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் கிறிஸ்தவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். இங்கு நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், தங்களின் மூதாதையர்களின் கல்லறைகளுக்கு சென்று, மலர் அலங்காரம் செய்து, மெழுகுவர்த்தி ஏற்றி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.இதேபோல, தேவாரம் அருகே, டி.சிந்தலைசேரியில் நடந்த கல்லறை திருநாள் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அங்கு பங்குதந்தை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதே போல் உத்தமபாளையத்திலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories: