2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சதி அம்பலம் பிரதமர் மோடி, வினோத் ராய் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பேட்டி

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக ஆதாரமற்ற முறையில் அன்றைய சிஏஜி தலைவர் வினோத் ராய்  கூறியிருந்தார். இதனை பயன்படுத்தி 2014 தேர்தலில் பாஜ ஆட்சி அமைத்தது.

சிஏஜி அறிக்கையிலிருந்து அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை நீக்குமாறு காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் அழுத்தம் கொடுத்ததாக தான் கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று கடந்த அக்டோபர் 10ம் தேதி  நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இதன் மூலம் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான சதி முழுமையாக வெளிப்பட்டுள்ளது. இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத் ராய் ஏஜென்டாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் அரசு கருவூலத்துக்கு ரூ.1.76 லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் இவர் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சதி உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் மோடி பிரதமரானதும், வங்கி தேர்வு வாரியத்தின் தலைவராக வினோத் ராய் நியமிக்கப்பட்டார். மோடி பிரதமராகி விட்டார். எனவே, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும், வினோத் ராயும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

‘‘2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் காங்கிரசும், திமுகவும் பாதிக்கப்பட்டன. நீதிமன்றத்தில் உண்மை நிரூபிக்கப்பட்டது என்றார். பேட்டியின் போது, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன் மற்றும் நிர்வாகிகள் கொட்டிவாக்கம் முருகன், அஸ்லாம் பாஷா, காண்டீபன், மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன் ஆகியோர் உடனிருந்தனர். 

Related Stories: