பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பியது

பெரம்பலூர்: தொடர் மழை எதிரொலியால் கொட்டரை நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலமான விசுவக்குடி அணை தீபாவளியன்று நிரம்பி வழியும் என பொதுப்பணித்துறை எதிர்பார்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி அருகே பச்சைமலை, செம்மலை ஆகிய இரு மலைக்குன்றுகளை இணைத்து ரூ.33.67 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் சார்பில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் புதிய அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்டது. 43.42 மில்லியன் கனஅடி கொள்ளளவும், 33 அடி உயரமும் கொண்டது.

அணை கட்டிமுடிக்கப்பட்ட 2015ம் ஆண்டும், 2017ம் ஆண்டும் கடந்த 2020ல் புரெவிப்புயல் காரணமாக பச்சைமலையிலிருந்து வந்த நீர்வரத்து காரணமாக டிசம்பர் மாதத்திலும் என 3 முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. நடப்பாண்டு 2021ல் கடந்த ஜூலை 2வது வாரத்தில் பச்சைமலை மீது பெய்த கனமழை காரணமாக விசுவக்குடி அணைக்கு 13.12 மில்லியன் கனஅடி தண்ணீர், அதாவது 14அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியது. அதேபோல் நடப்பு ஆண்டில் 2வது முறையாக அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்து வருவதால், 17ம்தேதி 18.86 மில்லியன் கனஅடி தண்ணீர் என அணைக்குள் 6.45 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியது.

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பச்சை மலையிலிருந்து நீர்வரத்து அதிகரித்து 10.3மீட்டர் உயரமுள்ள அணையில் தற்போது 7.6 மீட்டர் உயரத்திற்கு, அதாவது 33 அடி உயரமுள்ள அணையில் 25 அடி உயரத்திற்கு என 75 சதவீதத்திற்கு மேலாக தண்ணீர் நிரம்பியுள்ளது. குறிப்பாக 7.8 மீட்டர் அளவுக்கு தண்ணீர் நிரம்பினாலே தண்ணீர் ஷட்டர் வழியாக வழியும். எனவே இன்னும் 3 நாளில் 7.8 மீட்டர் உயரத்தை எட்டும் என்பதால் தீபாவளியன்று அணை நீர் தானாகவே வழிந்து வெங்கலம் ஏரிக்கு செல்லும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்றபடி தினமும் 250 கனஅடி தண்ணீர் இரு மலைக்குன்றுகளுக்கு இடையே சலசலத்து ஓடி வருகிறது.

அதேபோல் 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிதி மூலம் ரூ.56.7 கோடி மதிப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.92.07 கோடி மதிப்பில் மருதையாற்றின் குறுக்கே கொட்டரை பகுதியில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. 212 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால் தற்போது நிரம்பி வழிந்து வருகிறது. இந்த தண்ணீர் அரியலூர் மாவட்டத்தில் சில தடுப்பணைகளை கடந்து கொள்ளிடத்தில் கடக்கும். 100 சதவீதம் நிரம்பிவிட்டதால் கொட்டரை அணை கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த இரு அணைக்கட்டுகளின் நீர்வரத்து, பாதுகாப்பு குறித்து நேற்று பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: