ஆதம்பாக்கத்தில் அதிகாரி போல் நடித்து பணமோசடி: பெண்ணுக்கு வலை

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் ஒருவரிடம் ரேஷன் அதிகாரி போல் நடித்து ரூ18 ஆயிரம் ஏமாற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஆதம்பாக்கம், மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் ஷீலா (58). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். நேற்று தனது மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி, ஒரு பெண் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அவர், காஸ் சிலிண்டரில் கசிவு இருக்கிறதா என கேட்டு சமையலறைக்கு சென்றிருக்கிறார்.

அங்கு 2 காஸ் சிலிண்டர்கள் இருப்பதை பார்த்து, இது சட்டவிரோத இணைப்பு. கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது. இவற்றை சரிசெய்ய, ஒரு சிலிண்டருக்கு ரூ9 ஆயிரம் வீதம் தரவேண்டும் என அப்பெண் மிரட்டியிருக்கிறார். இதில் பயந்துபோன ஷீலாவும் அவரது மகளும் 2 சிலிண்டர்களுக்கும் சேர்த்து ரூ18 ஆயிரம் கொடுத்துள்ளனர். இப்பணத்தை பெற்றுக்கொண்ட அப்பெண், நான் இப்பிரச்னையை சரிசெய்துவிடுகிறேன் என கூறிவிட்டு மொபெட்டில் கிளம்பி சென்றுள்ளார்.

அப்பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமான ஷீலா, இதுகுறித்து உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் விசாரித்திருக்கிறார். அப்படி யாரையும் நாங்கள் அனுப்பவில்லை என பதிலளித்தனர். இதனால் தங்களை அப்பெண் ஏமாற்றி பணம்பறித்திருப்பது ஷீலாவுக்கு தெரியவந்தது. இப்புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி அதிகாரியாக நடித்து பணமோசடி செய்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: