தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி குடியரசு தலைவர் தலைமையில் டெல்லியில் நவ. 9, 10ல் ஆளுநர்கள் மாநாடு

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச்சிலைக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:  டெல்லியில் வருகிற 9ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் துணை நிலை ஆளுநர்கள் மாநாடும், 10ம் தேதி ஆளுநர்கள் மாநாடும் நடக்கிறது. இதில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதில் அந்தந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்படுகிறது.  

அதற்காகத்தான் அந்தந்த மாநிலங்களில் இருந்து பல்வேறு பணிகள் தொடர்பாக தகவல்களை ஆளுநர்கள் சேகரிக்கிறார்கள். எனவே ஆளுநர்கள் செய்து வருவது ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. ஆனால், தமிழகத்தில் ஆளுநர் தகவல் கேட்பது அரசியலாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மாநில அரசின் விஷயத்தில் தலையிட்டு எந்த ஆளுநரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட மாட்டார்கள். எனவே, மாநில அரசிடம் இருந்து தகவல் கேட்பது அந்த மாநிலத்தில்  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்காகத்தான். ஆளுநர்கள் என்பவர்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒரு ஆக்கப்பூர்வமான பாலமாக இருக்கிறார்களே தவிர பாரமாக இருக்கவில்லை என்றார்.

Related Stories: