கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நிலவும் பாகுபாடுகள்!: தடுப்பூசிக்கு மாநில அரசுகள் ஏன் கூடுதலாக பணம் தர வேண்டும்?.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

டெல்லி: மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளது. ஆக்சிஜன், அத்யாவசிய மருந்துகள் விநியோகம், கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், எல்.என்.ராவ், ரவீந்திரப்பட் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது 2021ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கும் நிலையில், தடுப்பூசி விலை நிர்ணயம், பற்றாக்குறை, கிராமப்புற தடுப்பூசி விநியோகத்தில் சுணக்கம் போன்ற தடைகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பினர். 
தடுப்பூசிக்கு விலையை நிர்ணயம் செய்ய அதிகாரம் கொண்டுள்ள மத்திய அரசு, தனக்கொரு விலையையும், மாநில அரசுக்கு ஒரு விலையையும் நிர்ணயம் செய்ய அனுமதித்தது எப்படி? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநில அரசுகள் ஏன் கூடுதலாக விலை தர வேண்டும் என்றும் கேட்டனர். முழு நாட்டிற்கும் தடுப்பூசி ஒரே விலை என்ற பொறுப்பை மைய அரசு ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். கொரோனா தடுப்பூசிக்கான விலையை நிர்ணயம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? என்ற கேள்வியையும் மத்திய அரசிடம் முன்வைத்தனர். 
மாநில அரசுகளுக்கு தடுப்பூசியை நேரடியாக வழங்க சர்வதேச நிறுவனங்கள் மறுத்துவிட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தடுப்பூசி கொள்முதல் விவகாரத்தை மாநில அரசின் விருப்பத்துக்கு விடப்பட்டுள்ளதா என்று வினவினர். டிஜிட்டல் இந்தியா என்று முழங்கி வரும் மத்திய அரசு, களத்தில் உள்ள எதார்த்த நிலையை அறியவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்த கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கோரும் நிலையில், உப்பள கிராமத்தில் அலைபேசி வசதி இன்றி இருக்கும் ஒருவருக்கு இது எப்படி சாத்தியம் என்பதை அரசு யோசித்திருக்கிறதா? என்றும் நீதிபதிகள் விமர்சனம் செய்திருக்கின்றனர். 
இதுவரை 21 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தாலும் இந்திய மக்கள் தொகையில் அது வெறும் 11 விழுக்காடு மட்டுமே என்ற நிபுணர்களின் கருத்தை எடுத்து கூறியுள்ள நீதிபதிகள், வெறும் 3 சதவீதம் மக்களுக்கு மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கூறினர். கொரோனா 3வது அலையில் இருந்து தப்ப வேண்டும் என்றால் தடுப்பூசி விநியோகத்தை போர்க்கால அடிப்படையில் அதிகப்படுத்த வேண்டும் என்ற மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களையும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

The post கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நிலவும் பாகுபாடுகள்!: தடுப்பூசிக்கு மாநில அரசுகள் ஏன் கூடுதலாக பணம் தர வேண்டும்?.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!! appeared first on Dinakaran.

Related Stories: