அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி எடப்பாடி பழனிசாமி உதவியாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்: கைது செய்ய தனிப்படை தீவிரம்

சேலம்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் உதவியாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றுபவர் சேலம் அருகேயுள்ள நடுப்பட்டி மணி(52). இவர் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கூறியதாக, போலீஸ் கமிஷனர், மாநகராட்சி அதிகாரிகள், கலெக்டர் ஆகியோரிடம் தெரிவித்து, தனக்கு வேண்டப்பட்டவர்களை மாற்றியதாகவும், இவ்வாறு அவர் ரூ.28கோடி அளவிற்கு சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நெய்வேலியை சேர்ந்த இன்ஜினியர் தமிழ்செல்வன், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.17லட்சம் மோசடி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமி பிஏ மணி, அதிமுகவை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி ஆகிய பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே மணி, வேலை வாங்கித் தருவதாக ரூ. 1 கோடியே 37லட்சம் வாங்கியதாக செல்வகுமாரும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் மணியையும் செல்வகுமாரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிஏ மணிக்கு முன்ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவரது வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான  விசாரணை திங்கட்கிழமை வருகிறது. அதற்குள் அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: