டீசல் விலை உயர்வு, தொடர்மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்தது: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகரிப்பு

சென்னை: டீசல் விலை அதிகரிப்பு மற்றும் தொடர்மழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நாசிக் பகுதியில் இருந்து வரும் பெரிய வெங்காயத்தின் விலை சென்ற வாரம் 50 கிலோ மூட்டை ரூ.1600 இருந்து ரூ,2100 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தவாரம் ஒரு மூட்டைக்கு ரூ.500 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் தரத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.48 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சின்ன வெங்காயத்தை பொறுத்தவரையில் ஒட்டன்சத்திரம், தாராபுரம், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கு மழைபெய்துவருவதால் அறுவடை குறைந்துள்ளது. இதன் விலை ஒரு கிலோ ரூ.10 வரை உயர்ந்துள்ளது. சென்ற வாரம் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் இதைவிட 25 சதவிகிதம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: