திண்டுக்கல் விதை பரிசோதனை நிலையத்தில் திடீர் ஆய்வு-முடிவுகளை உடனுக்குடன் வழங்க அறிவுறுத்தல்

திண்டுக்கல் : திண்டுக்கல்-  நத்தம் ரோட்டில் உள்ள குடகனாறு இல்லம் பின்புறம் உழவர் மைய வளாகத்தில்  விதை பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. விவசாயிகளால் உற்பத்தி  செய்யப்படும் விதைகள் அடுத்த பருவ விதைப்புக்கு பயன்படுத்துவதற்கு முன்பாக  விதைச்சான்று துறை மூலம் சுத்திகரிக்கப்பட்டு இந்த ஆய்வகத்திற்கு  பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு விதையின் முக்கிய குணாதிசயங்களான  முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியவை பரிசோதனை  செய்து விதைப்புக்கு ஏற்றது தானா என முடிவு அனுப்பப்படுகிறது. அதன் பின்  இவ்விதைகள் சான்று அட்டை பொருத்தப்பட்டு விவசாயிகளுக்கு தரமான விதைகள்  விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர தனியார் விதை விற்பனை மையங்களில்  விற்கப்படும் விதைகளை விதை ஆய்வாளர்கள் தரப்பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரம்  செய்து இப்பரிசோதனை நிலையத்திற்கு ஆய்விற்காக அனுப்புகின்றனர்.  விவசாயிகளும் தங்கள் கைவசம் உள்ள விதைகளை தாங்களே இங்கு வந்து பரிசோதனை  செய்து கொள்ளலாம். இவ்வாறு பரிசோதனை செய்ததில் இந்த ஆண்டு மட்டும் 3112  மாதிரிகள் ஆய்வு செய்து, 284 மாதிரிகள் தரம் குறைந்தவையாக  கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தரம் குறைந்த மாதிரிகளை விற்பனை செய்வோர் மீது  துறை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளும் தொடரப்பட்டுள்ளது. இந்த ஆய்வு  முடிவுகளை மதுரை சரக விதை பரிசோதனை அலுவலர் சிங்கார லீனா நேற்று திடீர்  ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விதை பரிசோதனைக்கு பயன்படும் உபகரணங்கள்  விதை முளைப்புக்கு பயன்படுத்தப்படும் வளர் ஊடகங்கள் அனைத்தும் முறையாக  பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

பின், விதை முளைப்புத்திறன்  பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் மண்ணின் அமில கார நிலை, தண்ணீரில் உள்ள  உப்பின் அளவையும் பரிசோதனை செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,  ‘தரம் குறைந்த மாதிரிகளை கண்டறிந்ததால் அவை விவசாயிகளுக்கு சென்று அடையாமல்  தடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு  தடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் முடிவுகள் அனைத்தும் உரிய  காலத்தில் உரிய நபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பருவமழை பெய்து வருவதால்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் பரிசோதனை முடிவுகளுக்கு முன்னுரிமை அளித்து  உடனடியாக வழங்க வேண்டும்’ என்றார். உடன் வேளாண்மை அலுவலர் கண்ணன்  இருந்தார்.

Related Stories: