மோடி ஒரு ‘ஜேம்ஸ் பாண்ட் 007’: திரிணாமுல் மூத்த தலைவர் கிண்டல்

கொல்கத்தா: பிரதமர் மோடியை ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ என்ற கதாபாத்திரத்துடன் திரிணாமுல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான திரிணாமுல் கட்சியின் தலைவர் ஒருவர், பிரதமர் மோடியை ஜேம்ஸ் பாண்ட் 007 (ஹாலிவுட் படங்களில் உளவாளியாக வரும் கதாபாத்திரம்) என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பிரதமர் மோடி கோட் சூட் அணிந்து கொண்டு ஜேம்ஸ் பாண்ட் போஸில் காணப்படுவார். மேலும், ‘அவர்கள் என்னை 007 என்று அழைக்கிறார்கள்’ என்று சப் டைட்டில் போடப்பட்டுள்ளது.

அதேபோல் புகைப்படத்தின் கீழே, ‘பூஜ்ஜிய வளர்ச்சி, பூஜ்ஜிய பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டமிடலில் ஏழு ஆண்டுகள் குழப்பம்’ என்றும் எழுதப்பட்டுள்ளது. மோடி பிரதமராக 7 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில், தற்போது 007 என்ற எண்ணுடன் தொடர்புபடுத்தி டெரிக் ஓ பிரையன் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பிரிட்டிஷ் உளவாளியான ஜேம்ஸ் பாண்ட்டுக்கு ‘நாட் நாட் செவென்’ என்கிற அடையாளம் உண்டு. பிரிட்டனில் ‘00’ என்கிற அடையாளம் பெறும் உளவாளிக்கு குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல அனுமதி உண்டு. குறிப்பிட்ட சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த உரிமை வழங்கப்படும். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிரிட்டனில் இந்த ‘00’ உரிமை பெற்ற ஏழாவது அதிகாரியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜேம்ஸ் பாண்ட் உடன் ‘007’ இணைந்துகொண்டது.

Related Stories:

More
>