இந்திரா காந்தியை இழந்தது போதாதா? பஞ்சாப் விவசாயிகளை நோகடிக்க வேண்டாம்: ஒன்றிய அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை

புனே: ‘பஞ்சாப் விவசாயிகளை வேதனைப்படுத்த வேண்டாம். பிரதமர் இந்திரா காந்தியை இழந்தது போதும்,’ என ஒன்றிய அரசை சரத் பவார் எச்சரித்துள்ளார்.  ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியின் சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்ட களத்துக்கு அருகே, கடந்த  15ம் தேதி பஞ்சாப்பை சேர்ந்த 35 வயதான லக்பீர் சிங் என்பவர், கைகள் வெட்டப்பட்டு, உடல் முழுவதும் 10க்கும் மேற்பட்ட கத்தி குத்து காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘சீக்கியர்களின் புனித நூலை களங்கப்படுத்தி பேசியதற்காக அவரை கொலை செய்தேன்,’ என நிஹாங் சீக்கிய பிரிவை சேர்ந்த சரப்ஜித் சிங் என்பவர் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், இதே பிரிவை சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், புனேயில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் எல்லை மாநிலங்களில் ஒன்றாக பஞ்சாப் உள்ளது. எனவே, பஞ்சாப் விவசாயிகள் வேதனைப்படுத்தும் செயல்களை ஒன்றிய பாஜ அரசு செய்யக் கூடாது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளில் பெரும்பாலானோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்தான். எல்லை மாநிலமான இதன் ஸ்திரத்தன்மையை கெடுத்து விட்டால், அதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பது நாம் அறியாதது அல்ல. ஏற்கனவே, இந்திரா காந்தி படுகொலை சம்பவம் மூலம், இதற்கான விலையை நாம் கொடுத்து விட்டோம்,’’ என்றார்.

Related Stories: