பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம் காட்டினால் ஒப்பந்த நிறுவனங்களின் டெண்டர் ரத்து செய்யப்படும்: புதிதாக ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை; நீர்வளத்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம் காட்டினால் ஒப்பந்த நிறுவனங்களின் டெண்டர் ரத்து செய்யப்படும் என்று நீர்வளத்துறை சார்பில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கவும் நீர்வளத்துறை உயர்அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஓடும் அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்கள், வாய்கால்களில் தண்ணீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 7ம் தேதி பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, நீர்வளத்துறை சார்பில், குறுகிய கால டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, கடந்த 25ம் தேதி முதல் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் படிப்படியாக அனைத்து இடங்களில் இப்பணிகள் துவக்கப்பட்டு, நடந்து வருகிறது. இதில், ஒரு சில இடங்களில் முழுமையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜேசிபி இயந்திரம், மிதவை இயந்திரம் வாடகைக்கு பெற்று ஒரு சில ஒப்பந்த நிறுவனங்கள் பணிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே வாடகைக்கு இது போன்ற இயந்திரங்களை எடுத்து வேலை செய்து வருகின்றனர்.

இதனால், ஒரு சில இடங்களில் முழுமையாக பணிகளை முடிப்பதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் இன்றைக்குள் (அக்.18ம் தேதிக்குள்) பணிகளை முடிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுமையாக மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனத்தின் டெண்டரை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக ஒப்பந்த நிறுவனத்திடம் அப்பணிகளை ஒப்படைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, இப்பணிகளை முடித்தால் மட்டுமே மழை நீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும். எனவே, அதற்கேற்ப தேவையான நடவடிக்கை எடுக்க நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு உயர்அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: