சின்னாளபட்டியில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் கழிவுநீர்: அகற்ற கோரிக்கை

சின்னாளபட்டி: சின்னாளபட்டி  பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்கள் கொசுக்கடி,  ஈக்கள் தொல்லையால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாரதிநகர்  பிள்ளையார்கோவில் எதிர்புறம் உள்ள 2 தெருக்களில் வடிகால் வசதி இல்லாததால்,  வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் காலி மனைகள்,  வீதிகளில் தேங்கி  நிற்கிறது. அப்பகுதி மக்கள் கழிவுநீரை மிதித்தபடிதான் வீடுகளுக்கு செல்ல  வேண்டிய அவலநிலை உள்ளது.

அருகில் தம்பித்தோட்டம்குளம் பகுதியில்  உள்ள காந்திகிராமம் ஊராட்சிக்கு சொந்தமான பகுதியில் 15 குடியிருப்புகள்  உள்ளன. 3ம் வார்டு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாயில்  ஏற்பட்டுள்ள அடைப்பால் காலி மனைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி  மக்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார்  தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து  செயல் அலுவலர் பிரகந்த நாயகியிடம் கேட்ட போது, ‘தனியார் சிலர் கால்வாயை  அடைத்து விட்டதால், காலி மனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. விரைவில்  கழிவுநீர் செல்வதற்கு மாற்று பாதை அமைத்து, அப்பகுதியில் ஏற்பட்டுள்ள  சுகாதார பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்’ என்றார்.

Related Stories: