நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தால் பூஸ்டர் தடுப்பூசி.! உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

ஜெனிவா: ‘நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருப்போருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தலாம்’ என உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், பல ஏழ்மை நாடுகள், குறிப்பாக ஆப்ரிக்காவில் உள்ள பல நாடுகளில் இன்னமும் முதல் டோசுக்கான தடுப்பூசி கூட கிடைக்காமல் உள்ளது. எனவே உலகம் முழுவதும் குறைந்தபட்சம் 40 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பிறகே, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில், வயதான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2 டோஸ் போட்டவர்களுக்கு 3வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு நேற்று பரிந்துரைத்துள்ளது. அதில், நடுத்தர மற்றும் தீவிரமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளோருக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, முடிந்தளவுக்கு பெரும்பாலான மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பிறகே பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை தொடங்க வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறி உள்ளனர். முன்னதாக, இந்தாண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் 40 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்த உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: