திருப்பதி கோயிலில் தினமும் 6 லட்சம் லட்டுகள்.! புதிய தொழில்நுட்பத்தில் பூந்தி தயாரிக்கும் மையம்: முதல்வர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 6 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட பூந்தி மையத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொழிலாளர்களின்   பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்  நவீன உபகரணங்கள், காற்றோட்டமான வசதிகளுடன் கூடிய புதிய பூந்தி தயாரிக்கும் மையம் கட்ட கட்டப்பட்டது.

இதில் தொழிலாளர்களை பாதிக்கும் அளவிற்கு வெப்பத்தை வெளிப்படுத்தாத 40 வெப்ப திரவ அடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்து பூந்தி தயாரிக்கும் பணியை தொடங்கிவைத்தார். இதன் மூலம் தினமும் 6 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படும். முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த முதல்வர், தனது எடைக்கு நிகராக 78 கிலோ அரிசியை துலாபாரம் செய்து காணிக்கை செலுத்தினார்.

ரூ.2.45 கோடி  உண்டியல் காணிக்கை

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழாவின் 5ம் நாளான நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 20,850 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 10,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஆங்காங்கே வைத்துள்ள உண்டியல்களில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில் ரூ.2.45 கோடி காணிக்கையாக கிடைத்தது.

Related Stories: