பிஎன்பி பாரிபா ஓபன்: அலெக்சாண்ட்ரா மீண்டும் அசத்தல்; ஹாலெப்பை வீழ்த்தினார்

இந்தியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரில், பெலராஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச் (100வது ரேங்க்) தொடர்ந்து முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். முதல் சுற்றில்  ஒசாரியோ செர்ரனோவை (71வது ரேங்க், கொலம்பியா) வீழ்த்திய சாஸ்னோவிச், 2வது சுற்றில் நேரடியாகக் களமிறங்கிய யுஎஸ் ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானுவை (22வது) மண்ணைக் கவ்வ வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து 3வது சுற்றில் ருமேனியா நட்சத்திரம் சிமோனா ஹாலெப்புடன் (17வது ரேங்க்) மோதினார். விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் அலெக்சாண்ட்ரா 7-5, 6-4 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டி 1 மணி, 38 நிமிடத்துக்கு நீடித்தது. இந்திய நேரப்படி  நாளை அதிகாலை நடைபெறும் 4வது சுற்றில் அலெக்சாண்ட்ரா சக வீராங்கனை விக்டோரியா அசரென்காவை (32வது ரேங்க்) எதிர்கொள்கிறார். அசரென்கா தனது 3வது சுற்றில்  செக் குடியரசின் பெத்ரா குவிதோவாவை (11வது ரேங்க்)  7-5, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தினார். கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் (28வது ரேங்க்)  2 மணி 41 நிமிடங்கள் போராடி ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லுசென்கோவாவை (13வது ரேங்க்) வென்றார். முன்னணி வீராங்கனைகள் ஜெலனா ஆஸ்டபென்கோ (29வது ரேங்க், லாத்வியா), இகா ஸ்வியாடெக் (போலந்து), ஜெஸ்ஸிகா பெகுலா, ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: