ஐஎஸ் துணைத்தலைவன் ஈராக்கில் கைது

துபாய்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவரான சமி ஜசிமை ஈராக் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்திருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவனான அல் அபு பக்கர் பாக்தாதி, கடந்த 2019ல் சிரியாவில் அமெரிக்க வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்டான். அவனுக்குப் பிறகு அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களாக இருப்பவர்களில் ஒருவரான துணைத் தலைவர் சமி ஜசிமை, ஈராக் பாதுகாப்பு படைகள் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைவிடத்தில் பதுங்கியிருந்த சமி ஜசிமை ஈராக் பாதுகாப்பு வீரர்கள் கைது செய்ததாக ஈராக் பிரதமர் முஸ்தபா அல் கதிமி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் எங்கு, எப்படி கைதானார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஐஎஸ் அமைப்பின் நிதி தொடர்பான விவரங்களையும் ஜசிம் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: