காஷ்மீரில் வேட்டையை தொடங்கியது பாதுகாப்புபடை: 7 அப்பாவி பொதுமக்களை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் :  ஜம்மு- காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரில் கடந்த 5 நாளில் பொது இடத்தில் அப்பாவி மக்கள் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.  கடந்த வியாழக்கிழமை ஸ்ரீநகரின் ஈத்கா பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தீபக் சந்த் என்பவரும், தலைமை ஆசிரியர் சுபிந்தர் கவுர் என்பவரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.குறிப்பாக, முஸ்லிம் ஆசிரியர்களை விட்டு விட்டு, இவர்கள் 2 பேரை மட்டும் பள்ளியில் இருந்து வெளியே இழுத்து வந்து சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து செயல்படும் ‘எதிர்ப்பு முன்னணி’ என்ற தீவிரவாத இயக்கம் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகங்களை பயமுறுத்தும் நோக்கத்துடன் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

இந்த நிலையில் அனந்த்னாக் மற்றும் பந்துபோரா ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டனர். இதில் ஒருவர் இம்தியாஸ் அகமது தார் எனத் தெரியவந்துள்ளது.இம்தியாஸ் அகமது தார் பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலை தொடர்ந்து பந்திப்போரா மாவட்டத்தின் குண்ட்ஜஹாங்கீர் என்ற இடத்தில் என்கவுன்டர் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: