அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் போட முடியாத நிலை என்று கூறுவது கேலிக்கூத்தானது: ஓபிஎஸ்சுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இரண்டு எண்ணிக்கையில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை  பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே செய்யப்பட்டு, அதன் முடிவு பேப்பரில் வழங்கப்படுகிறது என்கிற புகார் ஓரிரு ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டு வருகிறது. இப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எக்ஸ்ரே என்பது டிஜிட்டல் மையமாகி விட்டது.

எக்ஸ்ரே எடுக்கப்படுவது வாட்ச் அப் மூலம் தொடர்புடைய மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டு அதில் அவர்கள் பார்த்து கண்காணித்துக் கொள்கின்றனர். என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பேப்பரில் தான் எழுதிக் கொடுக்கிறார்கள். இது அனைத்து மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது. ஆனால் இரண்டு தொலைக்காட்சிகளில் நிதிச்சுமையின் காரணமாக, பிலிமுக்கு பதிலாக பேப்பரில் எழுதிக் கொடுப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார்கள். உண்மையில் எல்லா இடங்களிலும் எக்ஸ்ரே பிலிம் கையில் கொடுப்பது என்பது நிறுத்தப்பட்டிருக்கிறது.

விபத்து போன்ற நேரங்களில், ஆவணங்களின் முக்கியத்துவம் கருதி மருத்துவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் காரணங்களினால், ஆவணங்களுக்காக பிலிமில் எக்ஸ்ரே முடிவு வழங்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் தெரியாமல் தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஏதோ நிதிச்சுமையின் காரணமாக பிலிம்க்கு பதிலாக பேப்பரில் வழங்கப்படுவதாக, அதைப் பெரிதுப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். டெலி-ரேடியோலாஜி முறை உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கிறது. இப்போது யாரும் எக்ஸ்ரே முடிவுகளை கையில் எடுத்துக் கொண்டு செல்வதில்லை. விஞ்ஞானம் இப்படி வளர்ச்சியடைந்த நிலையிலும், தமிழக அரசு நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது என்று செய்தி வெளியிடுவது முறை தானா?

மருத்துவத்திற்கு தாம் பட்ஜெட் நிதி ஒதுக்கியபோது ரூ.19,420 கோடி மருத்துவத் துறைக்கு ஒதுக்கியதாகவும், தற்போது ரூ.18,933 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.487 கோடி நிதி குறைவாக மருத்துவத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதில் எந்த நிதியிலாவது, நீங்கள் மருத்துவத்துறைக்கு நிதி ஒதுக்கியதற்கும், இப்போது ஏதாவது ஒரு பிரிவில் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட முடியுமா? ஒட்டுமொத்தமாக ரூ.487 கோடி குறைவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

மினி கிளினிக் என்று ஆரம்பித்தீர்கள். அதற்கு 144 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உங்கள் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தீர்கள். எங்கே செவிலியர்களுக்கு சம்பளம் வழங்கினீர்கள்? ஒரு செவிலியர்களைக் கூட நியமிக்கவில்லை. இல்லாத செவிலியர்களுக்கு ஏன் ரூ.487 கோடி நிதி ஒதுக்க வேண்டும்? 10 ஆண்டுகாலம் அரசாங்கத்தில் இருந்துவிட்டு, ஏதோ தொலைக்காட்சியில் வந்த செய்திகளை வைத்து அறிக்கை விடுவது ஆரோக்கியமல்ல? அரசு மருத்துவமனை மீது வதந்திகளை பரப்புவதை நிதியமைச்சராக இருந்தவர் செய்யலாமா என்று அமைச்சர் கூறினார்.

Related Stories: