உட்கட்சி பூசல் பற்றி ஆலோசனை காங்கிரஸ் செயற்குழு இம்மாதம் கூடுகிறது?

புதுடெல்லி: காங்கிரசில் சமீப காலமாக உள்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட்டுக்கு இடையிலான பிரச்னை வெடித்த போதே, அதிருப்தி தலைவர் 23 பேர் இடைக்கால தலைவர் சோனியாவுக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்டவும், கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தவும் வலியுறுத்தினர். இப்பிரச்னை அடங்கிய சிறிது காலத்திற்குள், சமீபத்தில், பஞ்சாப்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சித்துவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இப்பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போதே, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சட்டீஸ்கரில் முதல்வர் பதவி தொடர்பான பிரச்னை வெடித்துள்ளது. அங்கு சிங் தியோல் முதல்வர் பதவியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரசில் உள்கட்சி பூசல் ஏற்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜி-23 தலைவர்கள், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்டும்படி சோனியாவுக்கு மீண்டும் கடிதம் எழுதினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தொண்டர்கள் கபில் சிபல் வீட்டின் முன்பு வன்முறை போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, இம்மாத இறுதியில் செயற்குழு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டு இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: