பேரியம் பட்டாசுக்கு தடை தொடரும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘பட்டாசு தயாரிப்பில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும்,’ என உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதற்காக பேரியம், நைநட்ரேட் ரசாயனங்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தடை விதித்தது. இந்தாண்டு காலை 4 மணி நேரமும், மாலை 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்யும்படி பட்டாசு நிறுவனங்களுக்கு் உத்தரவிட்டனர். தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. நீதிபதி எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு எதிர்ப்பாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பட்டாசுகளில் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.  இதை சிபிஐ.யும் தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது,’ என தெரிவித்தார்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்வந்த் தவே, ‘‘தமிழகத்தில் சிவகாசியில் மட்டும் 5 லட்சம் குடும்பங்கள் இந்த பட்டாசு தொழிலையே நம்பியுள்ளனர். சிபிஐ.யின் விசாரணை அறிக்கையை முழுமையாக ஏற்க முடியாது,’ என வாதிட்டார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பேரியம், நைட்ரேட் ரசாயனங்கள் அடங்கிய பட்டாசுகளை பயன்படுத்தக் கூடாது என இந்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பசுமை பட்டாசுகளை தவிர்த்து, பேரியம், நைட்ரேட் கலந்த பட்டாசுகளுக்கான தடை தொடரும். இது, தீபாவளி உட்பட அனைத்து விழாக்களுக்கும் பொருந்தும்.

பேரியம், நைட்ரேட் ரசாயனங்களை பட்டாசு உற்பத்தியாளர்கள் குடோன்களில் வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. ஏனெனில், மனித உயிருக்கு விலை நிர்ணயிக்க முடியாது. பட்டாசு தொழிலை நம்பி உள்ளவர்களின் பிரச்னைகளை நாங்கள் அறிவோம். ஆனால், சுற்றுச்சூழல் மாசினால் நாட்டின் நிலைமை என்னவாகும்? நாட்டின் முன்னணி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தான் அத்தகைய செயல்களை செய்துள்ளது என்பது கடும் அதிருப்தி அளிக்கிறது. இந்த வழக்கில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யாதவர்கள் உட்பட அனைவரும் விளக்க மனு மற்றும் கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்,’ என தெரிவித்தனர். விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: